நரசிம்மநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர்
இரணியன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன் அசுர குலத்தில் பிறந்தாலும் நாராயணின் பக்தனாக இருந்தான். அந்நாட்டில், இரணியனையே மக்கள் அனைவரும் கடவுளாக வணங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மகனே மீறியதால், அவனை துன்புறுத்தினான் இரணியன். நாராயணன் மீது பக்தி செய்ததற்காக பெற்ற பிள்ளையையே கொடுமை செய்ததைக் கண்ட திருமால் அவனை அழிப்பதற்காக மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். நரசிம்மரின் கோபத்தினால் உலகம் நடுங்கியது.
இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி நரசிம்மரின் கோபம் தணிந்து சாந்த சொரூபியாக அருட்பாலிக்கும்படி மகாலட்சுமியை வேண்டினார். தாயார் பெருமாளிடம் சினம் தணியும் வகையில் ஆசுவாசப்படுத்தினாள். இதன் அடிப்படையில் லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது. ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் லட்சுமி நரசிம்மப் பெருமாளுக்கு ஆலயம் அமைத்து சிறப்பாக வழிபாடு நடைபெற்று வந்துள்ளது. இதனால் இப்பகுதி நரசிம்மநாயக்கன்பாளையம் என வழங்கப்பெற்றதாக ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
இத்தல லட்சுமி நரசிம்மப் பெருமாளிடம் பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ''நாளை என்பதே நரசிம்மநாயக்கன்பாளையம் நரசிம்மப் பெருமாளிடம் இல்லை'' என பக்தர்கள் பக்திப்பரவசம் பொங்க கூறுகின்றனர். இத்தகைய அருளாற்றலை லட்சுமி நரசிம்மப் பெருமாள் வழங்கிடுவதால் இவரது மகிமை இத்தலத்தை சுற்றியுள்ள எல்லா பகுதிகளுக்கும் பரவ இன்றுவரை சிறப்பாக இரண்டு கால பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆலயத்தின் முன்பு அழகிய மண்டபத்துடன் கருடகம்பம் உள்ளது. இதனையடுத்து வசந்த மண்டபத்தினுள் பலிபீடம், கருடாழ்வார் காட்சி கிடைக்கின்றது.
மகாமண்டபத்தினுள் காளிங்கநர்த்தனர் அருளுகின்றார். அர்த்தமண்டபத்தில் தேவியருடன் நரசிம்மப் பெருமாள் உற்சவ மூர்த்தமாக காட்சி நல்குகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் உற்சவ மூர்த்தமும் உள்ளது. கருவறையில் மூலவர் லட்சுமி நரசிம்மப் பெருமாள் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சாந்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமர வைத்து, மேல் இரு கைகளில் சங்கு,சக்கரம் தாங்கியும், கீழ் இடது கையால் தாயாரை அரவணைத்த படி, கீழ்வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டிய நிலையில் தரிசனம் தருகிறார்.
இவரை வேண்டி பிள்ளை வரம் பெற்றவர்களும், குடும்ப ஒற்றுமை ஏற்பட்டு வாழ்வில் சிறந்தவர்களும் ஏராளம். சொந்த தொழில் செய்வோர், லாபகரமாக தொழில் சிறக்க இவருக்கு சனிக்கிழமை நாளில் துளசி மாலை சாற்றி வழிபாடு செய்து ஏற்றம் அடைந்தவர்கள் பலரும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை நாளில் காலை சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று காலை 8 மணிக்கு மேல் மஹா சுதர்ஸன ஹோமமும், லட்சுமி குபேர ஹோமமும் நடைபெறுகின்றன.
ஆடி மாதம் ஐந்து வெள்ளிக்கிழமை நாட்களில் மூலவர் லட்சுமி நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் முடிந்து பெண் பக்தர்களுக்கு வளையல், திருமாங்கல்ய கயிறு, மஞ்சள் குங்குமம் பிரசாதமாக வழங்கப் படுகிறது. இத்தலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் உற்சவ மூர்த்தமாக அருட்பாலிப்பதால் மாதந்தோறும் திருவோணம் நட்சத்திர நாளில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று இவருக்கு விமரிசையாக பூஜைகள் செய்யப்பட்டு, உறியடி உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றது. மார்கழி மாதம் 30 நாட்களும் காலை ஆறு மணிக்கு பக்தர்கள் ஆண்டாள் திருப்பாவை பாசுரம் பாடி சேவிக்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய இரண்டு விரத தினங்களும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமைகளும் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை விமரிசையாக நடைபெறுகிறது.
தமிழ் வருட பிறப்பு, தெலுங்கு வருட பிறப்பு, ஆங்கில வருட பிறப்பு,தை மாதம் முதல் நாள், திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல், ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, தீபாவளி திருநாள், விஜய தசமி ஆகிய வருட முக்கிய விரத தினங்களிலும் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கோயம்புத்தூர் மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி புதுப்பாளையம் சாலையில் அரை கி.மீ., நடந்து சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். ஆட்டோ, கால் டாக்ஸி வசதி உள்ளது.
செல்வ வளம் அருள்வார் லட்சுமி நரசிம்ம பெருமாள்